தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்து சென்றார். தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது பக்திகோஷம்
எழுப்பப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. மேலும் பள்ளி அக்ரஹாரம் வீரநரசிம்மர், மணி குன்றா பெருமாள் மற்றும் நீல மேகப் பெருமாள் கோயில் உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.