தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் விஏஓ கரிகாலன். இவர் முன்னாள் விமானப்படை வீரர். இவர் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் கேட்டு வருபவர்கள், கைலி, அரைக்கால் சட்டை, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தார். மேலும் கைலி அணிந்து வருபவர்களை வி.ஏ.ஓ அலுவலகத்தில் உள்ளே விட மறுப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் விவசாயி ஒருவர், தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு, சென்றுள்ளார். அப்போது அவர் கைலி அணிந்து இருந்துள்ளார். இதனால் அந்த விவசாயியை அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே காக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெகு வேகமாக பரவியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், செங்கிப்பட்டியை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள்தான். அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள் தான் அதிகம் உள்ளனர்.
வயலில் வேலை செய்ய கைலி, அரைக்கால்சட்டை போன்ற ஆடை அணிந்துதான் வேலைக்கு செல்கிறோம். அவசரமாக சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், கைலியுடன் தான் செல்ல வேண்டி உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கைலி, அரைக்கால் சட்டை, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என்று கூறுவது நியாயமான செயல் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,(பொ)., பழனிவேல் கூறுகையில், வி.ஏ.ஓ., கரிகாலன் மீது, அடுத்தடுத்து புகார்கள் எழுந்தது. இதனால், விசாரணைக்கு பிறகு அவரை வேறு வருவாய் கோட்டத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை தற்காலிகமாக பணி விடுப்பு ஆணை நேற்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.