டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு. கலைவாணி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யனார் கோயில் 12வது வார்டில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது.
வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு அகிலன் ஏற்பாட்டில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் பாரதி தலைமையில் மருத்துவ குழுவினர் இந்த காய்ச்சல் முகாமை நடத்தினர். முகாமில் காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவ முகாமில் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல், கை, கால் மூட்டுக்கள் வலி போன்றவை இருந்தால் உடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். வீடுகளை சுற்றியும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி இருக்காமலும் பார்த்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
வல்லம் பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன், 12வார்டு உறுப்பினர் அன்பழகன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் டெங்கு தடுப்பு களப்பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் வாட்டர் டேங்குகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு பரவலாக கொசு விரட்டும் புகை மருந்தும் அடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.