தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 51 பேர், கும்பகோணம் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் 27 பேர், 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளார் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகம், 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், திமுக ஒன்றியச் செயலர் முரசொலி, அதிமுக ஒன்றியச் செயலர் முத்துமாறன், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ், பாஜக காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.