தஞ்சை அருகே குருங்களூரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் ( 59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாணிக்கவாசகம் வழக்கம்போல் மாடுகளுக்கு உணவு வைத்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாடுகள் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வீட்டின் பின்புறம் ஓடியுள்ளார்.
அங்கு மாட்டு கொட்டகை மற்றும் அருகில் அடுக்கி வைத்திருந்த வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தீயின் வெப்பம் தாங்காமல் பசு மாடுகள் மேலும் மேலும் கத்தின. மாணிக்கவாசகம் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயின் வேகம் அதிகம் இருந்ததால் கொட்டகை முழுவதும் பரவியது. தொடர்ந்து தஞ்சாவூர் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மாணிக்கவாசகம் தகவல் அளித்தார். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ஒரு பசு மாடு பரிதாபமாக இறந்தது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு பசுமாடுகளை தீக்காயங்களுடன் மீட்டனர். காயமடைந்த பசு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் மாட்டு கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் அருகில் அடுக்க வைத்திருந்த 450 க்கும் அதிகமான வைக்கோல் போர் கட்டுகளும் எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து மாணிக்கவாசகம் தஞ்சை தாலுகா போலீசில் முன் விரோதம் காரணமாக மாட்டு கொட்டைக்கு யாரோ தீ வைத்துள்ளனர் என்று புகார் செய்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.