திருவாரூர் மாவட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் பழனிவேல் (38). இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மெலட்டூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீஸ்காரர் பழனிவேல் மற்றும் போலீசார் தஞ்சாவூர் அருகே உதாரமங்கலம் – குருங்களூர் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியே தஞ்சாவூர் மதுவிலக்கு அமல்பிரிவு ஏட்டு ராமநாதன் (45) என்பவர் ஓட்டி வந்த பைக் போலீஸ்காரர் பழனிவேல் மீது மோதியது. இதில் போலீஸ்காரர் பழனிவேல் படுகாயம் அடைந்தார். உடன் அவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிவேல் உயிரிழந்தார். தகவல் அறிந்த தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஷ் ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.