தஞ்சை மாநகரில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி மாநகரில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதை பார்வையிடுவதற்காக ஏராளமானோர் தங்களது மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள், ஸ்கூட்டர்களில் வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களில் வருபவர்களை ஒரு கும்பல் கண்காணித்து அவர்களது மோட்டார் சைக்கிளை நைசாக திருடிச்சென்று விடுகிறார்கள். கடந்த 15ம் தேதி மாலையில் புத்தக திருவிழாவுக்கு வந்த தொழிலாளி ஒருவர், தான் ஓட்டி வந்த மொபட்டை சங்கீத மகால் அருகே கலைக் கூடத்திற்கு எதிரே நிறுத்தவிட்டு சென்றார். அவர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் வந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் அரைக்கால் டவுசருடன், முழு கைசட்டையை மடித்து வைத்தபடி வந்த வாலிபர் ஒருவர், மொபட் மீது ஏறி அமர்ந்து கொண்டு அந்த மொபட்டின் முன்பகுதியில் இருக்கும் வயரை பிரித்துவிட்டு அந்த மொபட்டை எடுத்துகொண்டு வேகமாக ஒட்டி செல்கிறார்.
அவர் மொபட்டை திருடும் காட்சியும், திருடிய மொபட்டுடன் வேகமாக செல்லும் காட்சியும் அடுத்தடுத்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. இந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தஞ்சை மேற்கு குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு சங்கீத மகால் அருகே தீயணைப்பு வீரர் ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் அவர் திரும்பி வந்து பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிளையும் வாலிபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது.
மோட்டார் சைக்கிள் திருட்டில் கும்பலாக ஈடுபடுகின்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மாநகரில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள்களை குறி வைத்து திருடும் கும்பல் உலா வந்து கொண்டு இருக்கிறது.
தஞ்சை கூட்டுறவு காலனி பகுதியில் ஒருவர் சைக்கிளை வீட்டில் நிறுத்தி இருந்தார். அதை சிலர் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலிசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது வாலிபர்கள் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மோட்டார் சைக்கிள், சைக்கிளை குறிவைத்து திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.