தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு முத்துப்பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன் நந்தியை விலக கட்டளையிட்ட ஸ்தலமுமான சிறப்பும் பெருமையும் பெற்றதாகும். மேலும் பிரசித்தி பெற்ற துர்க்கை ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் துர்க்கையம்மன் வடக்கு முகம் நோக்கி மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில், எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் அன்னையாக அருள்பாலிக்கிறார். ராகு
பகவானுக்கு அதிதேவதையாக துர்க்கையம்மன் விளங்குவதால் தங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற எலுமிச்சைபழ விளக்கேற்றியும், நெய் விளக்கேற்றியும் ராகுகால நேரத்தில் வழிபடுவதால் இது ராகுதோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்புபெற்ற தலத்திற்கு ஆணையர் பொது நலநிதியில் ரூ.43.50 இலட்சம் மற்றும் திருக்கோவில் நிதி ரூ43.50 இலட்சம் என மொத்தம் ரூ.87 இலட்சம் மதிப்பீட்டு நிதியில், இலுப்பை மரத்தினால் புதிய தேர் சுமார் 20 டன் எடையில், 19 அடி அகலத்திலும், 25 அடி உயரத்திலும், அலங்காரத்தில் 52 அடி உயரத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணியை மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான கல்யாணசுந்தரம் பங்கேற்று திருப்பணியை நேற்று தொடங்கி வைத்தார். மேலும், இந்த தேரோட்டம் வரும் 2025ம் ஆண்டு வைகாசி விசாக திருவிழாவின் போது நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ஆறுமுகம், ஆய்வாளர் சுதா ராமமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றிசெல்வி ரகு, ஸ்தபதி செம்பனார்கோயில் முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.