தஞ்சை மாவட்டம் மேலவெளி அருகே விடுதலை நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்- மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்து ஜெயராஜ், சிவசங்கரியை கட்டி போட்டு
அரிவாள் முனையில் மிரட்டி 4 முக்கால் பவுன் தங்க தாலி செயின், 30 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதைப்போல் தஞ்சை நீலகிரி தெற்கு தோட்டம் லட்சுமி விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசசிவர்ணன்( 19). சம்பவத்தன்று இவர் திருவையாறு புறவழிச்சாலை அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து 2 பேர் முகவரி கேட்பது போல் சிவசசிவர்ணனிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் திடீரென்று சிவசசிவர்ணனை வலது கை மற்றும் வலது கால் பகுதியில் கத்தியால் கிழித்து மோட்டார்சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் கள்ளப் பெரம்பூர் மற்றும் தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜய் , டேவிட், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை தேடி வந்தனர் .
இந்த நிலையில் தம்பதியை கட்டிப்போட்டு நகை கொள்ளை, வாலிபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிப்பு ஆகிய சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சை மாவட்டம் காசநாடுபுதூர் மேட்டுக் கொல்லை தெருவை சேர்ந்த அருண்குமார் (25), பாலகுமார் (31), விளார் ஒத்தக்கடை தெருவை சேர்ந்த அப்பாஸ் ( 25), சக்கரசாமந்தம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார் (32) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அருண்குமார் உட்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.