தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேலவழுத்தூரில் ரயிலடி புது தெருவில் அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் தற்போது 37 மாணவ மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பள்ளியின் ஒரு கட்டிடம் இடிந்த நிலையிலும், மற்றொரு கட்டிடம் சிதலமடைந்து, முட்புதர்கள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பாதுகாப்பான கழிவறை வசதிகள் கிடையாது. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் அட்டையில் வேயப்பட்டுள்ளதால் வெயில் மற்றும் மழை காலங்களில், மாணவ மாணவிகள்
பள்ளியின் அருகில் உள்ள மரத்தடி நிழலில் கல்வி பயிலக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொடிய பூச்சிகளும், பாம்புகளும் காணப்படுவதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பள்ளியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாப்பு கருதி இந்த பள்ளியில் சேர்க்க தயங்குகின்றனர். எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பழமையான இந்த பள்ளிக்கட்டிடத்தை இடித்துவிட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோருக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் அஹமத் கோரிக்கை வைத்துள்ளார்.