தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள வாழக்கொல்லை என்ற கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவரது ஒரே மகன் தருண்(14), அதிராம்பட்டினத்தில் ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 29ம் தேதி மாலை பள்ளி முடிந்து தருணும், பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் பவ்யாஸ்ரீ(10) என்பவரும் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். தருண் பைக்கை ஓட்டினான். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. இதில் தருணும், 5ம் வகுப்பு மாணவியிான பவ்யாஸ்ரீயும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மூளைச்சாவு
ஏற்பட்டு தருண் இறந்தார். அவரது தாயார் மகாலட்சுமியின் விருப்பப்படி தருணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
தருணின் கண்கள், இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தருணின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை தருண் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
உடல் உறுப்புகள் தானம் செய்ததால், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, தாசில்தார் குமார், எம்.எல்.ஏ அண்ணாதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தருண் உடலுக்கு அஞ்சல செலுத்தினர், அதைத்தொடர்ந்து தருண் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.