தஞ்சாவூருக்கு புகழ் சேர்க்கும் இடங்களில் சிவகங்கை பூங்காவிற்கு தனி சிறப்பிடம் உண்டு. இந்தப் பூங்காவில் மான்கள், மயில், புனுகு பூனை, முயல், நரி போன்றவை வளர்க்கப்பட்டு வந்தன. தஞ்சை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தலமாக இந்த சிவகங்கை பூங்கா விளங்கி வந்தது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், சிறுவர் ரயில் சிவகங்கை குளத்தில் படகுகள், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா புதுப்பிக்கும் பணி நடந்தது. இதனால் இங்கிருந்த விலங்குகள் வேதாரண்யம் மற்றும் சென்னை வனவிலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது திறப்பு விழா காண உள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் நடைபாதை வசதி என பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிவகங்கை பூங்கா எப்போது திறக்கப்படும் என்பது தஞ்சை மக்களின் கேள்வியாக தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் சிவகங்கை பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மேயர் சண். ராமநாதன் கூறியதாவது: தஞ்சாவூர் மக்கள் விரைவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவகங்கை பூங்கா திறப்பு விழா வரும் எட்டாம் தேதி நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி இந்த பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைக்கின்றனர். எட்டாம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சிவகங்கை பூங்கா வந்துவிடும். பணிகளை
துரிதப்படுத்துவதற்காக இன்று ஆய்வு மேற்கொண்டோம். உங்க வழி ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நீச்சல் குளம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரின் ஒப்புதலோடு எளிமையான நுழைவு கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பழமையான புராதனமான தொன்மையான நகரம் தஞ்சை மாநகரம். அதில் சிவகங்கை பூங்கா திறப்பு விழா என்பது நேர்த்தியான விஷயம். மாணவ, மாணவிகளுக்கான சலுகை கட்டணமும் உண்டு.
திறப்பு விழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் சசிகலா அமர்நாத், உதவி பொறியாளர் ரமேஷ், துப்புரவு அலுவலர்கள் ராமச்சந்திரன், தங்கவேல், துப்புரவு ஆய்வாளர் முகமது ஹனிபா மற்றும் பலர் உடன் இருந்தனர்.