தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.
இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து 417 பேர் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் ஏற்கனவே பணியில் உள்ள போலீசார் ஆவர். அனைவரும் சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த உடல் தகுதி தேர்வை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் பார்வையிட்டனர்.
முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது. பின்னர் 1500 மீ ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை வரை உடல் தகுதி தேர்வு நடந்தது.
2ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது. இதில் நீளம், உயரம் தாண்டுதல் , கயிறு ஏறுதல் நடைபெற உள்ளது. இந்த 2 நாள் சோதனையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் வழங்கப்படும்.