தஞ்சை மாவட்டம், மேல உத்தமநல்லூர், பூஞ்சேரி, இலுப்பக்கோரை, மாத்தூர், வீரசிங்கம் பேட்டை, ஈச்சங்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள காவிரி படுகை நிலங்களில் அதிக அளவில் செவ்வந்தி பூக்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு (ஜனவரி1) முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை அறுவடை செய்யும் வகையில் செவ்வந்திப் பூக்கள் இப்பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு செவ்வந்திப் பூக்கள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை தீவிரம் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக சில இடங்களில் செடிகள் கருகி மகசூல் குறைந்து விட்டதாகவும், வெளியூர் பூக்கள் வரத்தால் விலையும் குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி பரணிகுமார் கூறும்போது… இப்பகுதி கிராமங்களில் 50 ஏக்கரில் செவ்வந்தி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே செவ்வந்திப் பூக்கள் அறுவடை தொடங்கி விட்டது.
இருப்பினும் பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் செவ்வந்தி பூக்கள் , பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒரு கிலோ ரூ. 60 வரை மட்டுமே விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ. 120 முதல் ரூ. 150 வரை விற்றால் மட்டுமே செலவு செய்தது போக விவசாயிகளுக்கு சிறிதளவாவது லாபம்
கிடைக்கும். திண்டுக்கல், சேலம், ஓசூர், ராயக்கோட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பூக்கள் வரத்தாலும் விலை சரிவடைந்து விட்டது. நம்பிக்கை இருப்பினும் பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் செவ்வந்தி பூக்களின் விலை உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். பூக்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் தோறும் பூக்கள் சந்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இவ்வாறு தெரிவத்தார்.