தஞ்சை அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக அரசு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் பங்களிப்பை செலுத்தும் வகையில் இத்திட்டம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 19 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தஞ்சை அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு உபகரணங்களை இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு வல்லம் திமுக நகர செயலாளரும், முன்னாள் மாணவருமான டி.கே.எஸ்.ஜி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மாணிக்கம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்பிஎஸ் கண்ணன், பொருளாளர் மணிமாறன், பேரூராட்சி துணைத் தலைவர் வி. ஆர். வெங்கடேசன் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சிங். இரா.அன்பழகன் கலந்து கொண்டனர்.
பள்ளியில் 1983 -1985ம் ஆண்டில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 20 மின்விசிறிகளும், 1995-1999 கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் 15 டேபிள்கள், 15 சேர் மற்றும் 36 எல்இடி டியூப் லைட்டுகள் வழங்கினர்.