தூத்துக்குடியில் இருந்து 930 டன் உரம் சரக்கு ரயிலில் தஞ்சாவூர் வந்தது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் விளைவிக்கப்படுகிறது. இது தவிர எள் உளுந்து, கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 690 டன் பொட்டாஷ் உரம், 240 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் என மொத்தம் 930 டன் உரங்கள் சரக்கு ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.