Skip to content
Home » தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

தஞ்சாவூர் அருகே உள்ளது வல்லம் பேரூராட்சி. இங்கு நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், சமத்துவப் பொங்கலாகவும் வளம் மீட்பு பூங்காவில் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. 15 வார்டுகள் கொண்ட இந்த பேரூராட்சியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பை கிடங்கு என்று சொன்னாலே மூக்கை பொத்திக் கொள்வார்கள். ஆனால் வல்லம் வளம் மீட்பு பூங்காவோ சுற்றுலாத்தலம் போல் உள்ளது. அந்தளவிற்கு மிகவும் சுகாதாரத்துடன் இந்த வளம் மீட்பு பூங்கா பராமரிக்கப்படுகிறது.

இந்த வளம் மீட்பு பூங்காவில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவிற்காக கோலங்கள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு, குடும்ப ஒற்றுமை உட்பட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. விழாவிற்கு செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் அருளானந்தம் பொங்கல் வைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், பேரூராட்சி உறுப்பினர்கள் அமுதா, சேகர், ரௌலத் நிஷா, சுந்தர்ராஜ், அன்பழகன் ஆகியோர் பொங்கல் பானையில் அரிசி, வெல்லம் உட்பட பொருட்களை இட்டனர். பால் பொங்கி வந்த போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குரல் எழுப்பி கொண்டாடினர்.

பின்னர் தூய்மைப்பணியாளர்களுக்கு பானை உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை திமுக நகர செயலாளர் கல்யாணசுந்தரம் வழங்கி பேசினார். இதில் தூய சவேரியார் ஆலய உதவி பங்குதந்தை அன்புராஜா, பேரூராட்சி உறுப்பினர்கள் ருக்மணி, ஆரோக்கியசாமி, பரிமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஆண்கள் பள்ளி கண்ணன், பெண்கள் பள்ளி மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் தனபால், சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.