தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -tது சதய விழா அக்டோபர் 24 ம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பார் போற்றும் புகழுடைய இந்தப் பெரியகோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 2 நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24 -ம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25ம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இந்த விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களிலும் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும்
நடைபெறவுள்ளன. இதையொட்டி, பெரியகோயிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. முன்னதாக, பந்தக் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட பொருள்களால் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை இணை ஆணையர் சு. ஞானசேகரன், உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் ப. மாதவன், நகை சரிபார்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.