தஞ்சாவூர் – திருவாரூர் ரயில் வழித்தடத்தில் குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், முக்கிய ரயில்களை தவிர்த்து இதர ரயில்கள் நேற்று காலை முதல் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், திருச்சி – காரைக்கால் டெமு ரயில் திருச்சியிலிருந்து நேற்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு பிற்பகல் 12.05 மணிக்கு வந்தது. ஆனால், இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கப்படவில்லை. ஆனால், திருச்சி ரயில் நிலையத்தில் திருவாரூர், நாகை, காரைக்கால் வரை பயணச்சீட்டு வழங்கப்பட்டது.
இதனால், இந்த ரயிலில் வந்த திருவாரூர், நாகை, காரைக்கால் வழித்தட பயணிகள் ரயில் நிறுத்தப்பட்ட தகவலறிந்து ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் ரயில் நிலைய மேலாளரிடம் முறையிட்டனர். இவர்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இப்பயணிகளுக்கு மீதித்தொகையைத் திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தொகையைப் பெற்ற பயணிகள் பேருந்தில் ஏறிச் சென்றனர்.