Skip to content
Home » தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

  • by Senthil

சென்னைக்கு ஒரு மெரினா பீச் என்றால் தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம் பீச் பெருமையை கொடியாக கட்டி அனைவரையும் ஈர்க்கிறது.

சரி இது எங்க இருக்கு. பார்ப்போமா இந்த கட்டுரையில்… நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக பரவசப்படுத்தும் வங்க கடலின் கடற்கரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. 27 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடித் தளங்கள் இருக்கு. அப்போ தஞ்சாவூர் பீச்… இதோ சொல்கிறோம்.

மல்லிப்பட்டினம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரைப் பகுதிதான் மக்களை கவர்ந்து இழுத்து வருகிறது. அடடா… என்ன ஒரு அமைதி. மனசு லேசாகுது.

டென்ஷன் காணாமல் போகுது. சுற்றி உள்ள தென்னந்தோப்பின் நிழலும், கடற்காற்றின் தாலாட்டும், 2 கி.மீ தொலைவுக்கு வெள்ளை வெளேர் என்ற மணற்பரப்பும் இது நம்ம ஊரு “கோவா”ங்கோ என்று மனசை கொள்ளை கொள்கிறது.

ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் கரையை தொட்டு ஹாய் சொல்ல ஓடோடி வருகின்றன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலையே என்னை தொடு என்று ஓடியாடி மகிழ்கின்றனர். மாலை வேளையில் மஞ்சள் வெயிலின் சூடு கொஞ்சம் கூட தெரியாமல் தென்னந்தோப்பில் புகுந்து வரும் காற்று நம்மை தழுவும் போது உடல் மட்டுமல்ல மனசும் சிலிர்க்கிறது.

நம்ம ஊரு கொலம்பஸ்கள் லீவு விட்டாச்சுன்னா புது, புது இடங்களா தேடுவாங்க விடுமுறையை கொண்டாட. இவங்களுக்கெல்லாம் ஏற்ற இடம்னு பார்த்தா புதுப்பட்டினம் கடற்கரை பெஸ்ட் சாய்ஸ். விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூரின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் ‘தஞ்சாவூர் மாவட்ட பீச்’ புதுப்பட்டினம் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் வந்து மனம் மகிழ்ந்து செல்கின்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!