தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு ஏட்டு. இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி லதா (50). மகள் லாவண்யா (26), மகன் ராகுல் (25).
இந்நிலையில் தான் வீட்டில் வளர்க்கும் நாயை குளிப்பாட்டுவதற்காக தனது மகன் ராகுல், மகள் லாவண்யாவுடன் நேற்று மதியம் காரில் தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை மானோஜிப்பட்டி பாலம் அருகே கல்லணைக் கால்வாய்க்கு சென்றார்.
கால்வாயில் குளிப்பாட்டும் போது நாய் பள்ளத்துக்கு சென்றதால், அதைக் காப்பாற்றுவதற்காக ராகுல் சென்றார். இருவரும் தண்ணீரில் சிக்கியதைப் பார்த்த ராஜாவும் ஆற்றுக்குள் இறங்கி மீட்க முயன்றார். ஆனால், கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கிய ராஜா அடித்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில் கரையில் இருந்த பொதுமக்கள் கால்வாயில் இறங்கி ராகுலையும், நாயையும் காப்பாற்றினர்.
உடன் இதுகுறித்து தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கால்வாயில் இறங்கி ராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில் கண்டிதம்பட்டு பகுதியில் சடலமாக ராஜா மீட்கப்பட்டார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.