தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சன்னதி தெருவில் உள்ள 75 ஆயிரம் சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு என்ற பெயரில் இருந்து வருகிறது.
கோயிலில் நடைபெறும் உற்சவத்தின்போது சுவாமி புறப்பாட்டை நடத்தும் 6 கிராமங்களை சேர்ந்த 140 குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகம் இந்த இடத்தை வீடு கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தது. இந்நிலையில் இந்த இடம் வருவாய் துறைக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வட்டாட்சியர் சுசிலா, பேரூராட்சி செயல் அலுவலர் மங்கையற்செல்வி உள்ளிட்டோர் தொடர்புடைய இடத்தைக் காவல் துறையினரின் பாதுகாப்புடன் கையகப்படுத்தச் சென்றனர். அப்போது 14 பெண்கள் உள்பட கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் என 44 பேர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்தக் கூடாது என தடுத்து நிறுத்தினர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 44 பேரையும் திருவிடைமருதூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் வருவாய்த் துறை அலுவலர்கள் கம்பி வேலி அமைத்து தொடர்புடைய இடம் அரசுக்குச் சொந்தமானது என்ற விளம்பர தட்டி 4 இடங்களில் அமைத்து கையகப்படுத்தினர்.