காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி, நேற்று மாலை தஞ்சாவூா் பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம். இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரமான நேற்று மாலை பெருவுடையாா் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதேபோல் வரும் 27 ம்தேதி மற்றும் டிச. 4, 11ம் தேதிகளில் சோம வார சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது .