தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இதில் சனிக்கிழமை வரும் சனி பிரதோஷம் நாளில் கூடுதல் சிறப்போடு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும். தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30
மணி முதல் 6 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும். மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது.
மாதம்தோறும் பிரதோஷம் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் நேற்று சனி பிரதோஷம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறப்பாக நடந்தது.
சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலுக்கு காலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை அனைத்து கோயில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நேற்று சனி மகாபிரதோஷம் என்பதால் மாலையில் பெரிய கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய தொடங்கினர். இதனால் கூட்டத்தை சமாளிக்க கோயிலை சுற்றியுள்ள நந்தவனம் வழியாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு வாய்ந்த மஹா பிரதோஷமான நேற்று பெரிய கோயிலில் நந்தியெம் பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம் உட்பட மங்கலப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நந்தியெம்பெருமான், பெருவுடையார், பெரிய நாயகி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.