பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் ஆற்றுபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் நாளில் புத்தாடை அணிந்தும், ஏழை எளிய மக்களுக்கு இறைச்சியை தானம் செய்யும் நாளாக இதனை இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்றனர். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் இப்பக்ரீத் திருநாள் ஆகும். இந்த நாளில் இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தஞ்சையில் ஆத்துபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈஸ்வரி நகரில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கீழ வாசலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.