தஞ்சாவூர் அருகே வேலை தேடி வரும் 24 வயது இளைஞரின் பேஸ் புக் மூலம் மர்ம நபர் ஒருவர் ஜூலை மாதம் அறிமுகமானார். அப்போது, ஆன்லைன் வாயிலாக வணிகம் செய்யலாம். அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பண பரிவர்த்தனை, இருப்பு பராமரிப்பு, சர்வர் பிரச்னை, வழக்குரைஞர் கட்டணம் என பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய இளைஞர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 5 லட்சத்து 97 ஆயிரத்து 400 செலுத்தினார். ஆனால், அதன் பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தன்னை அந்த மர்மநபர் ஏமாற்றியது இளைஞருக்கு தெரிய வந்தது. இது குறித்து அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இணையவழி மூலம் வேலை தருவதாகவும், டாஸ்குகளை நிறைவேற்றினால் ரேட்டிங் உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வந்தது. இதை நம்பிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மர்ம நபரின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 6 லட்சத்து 85 ஆயிரத்து 21 செலுத்தினார். அதன் பின்னர் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளப்பட்டு வருகிறது