கோடையின் தொடக்கத்திலேயே தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பருவமழை காலத்தை போன்று பல இடங்களில் அதிகமாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் தணிந்து இதமான சூழல் நிலவி வந்தது. அக்னிநட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதற்கு முன்னதாகவே மழை பெய்ததால் ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் குறைந்த அளவே இருந்தது.
இதற்கிடையில் மோக்கா புயல் உருவான பிறகுதான் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. மோக்கா புயல் காற்றில் இருந்த ஈரப்பதத்தை ஈர்த்ததும், காற்றின் திசையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுமே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க காரணம் தெரிவிக்கப்பட்டது.
வெயில் தாக்கத்தால் தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, கரும்புச்சாறு, சர்பத், லெஸி, நுங்கு, ஜூஸ் விற்பனை அமோகமாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஓரளவு வெயிலை மக்கள் சமாளித்தனர். இருப்பினும் இரவு நேரங்களிலும் அனல் காற்று, புழுக்கம் என மக்கள் பெரும் அவதியடைந்தனர். இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் சற்றே வெப்பம் குறைந்தாலும் வெயில் வாட்டியது. இப்படி பாடாய் படுத்தி வந்த அக்னி நட்சத்திரம் நேற்றுடன் விடைபெற்றது. இதனால் இதன் பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.