தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த மானோஜிப்பட்டி பொதிகை நகர் பொதுமக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சமத்துவப் பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர். உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில் ஏழைப் பாட்டாளி மக்களின் இதயம் குளிர்ந்திடும் வகையில் தொழிலாளர் சமுதாய தோழர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்துகின்றனர். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இந்த சமத்துவ பொங்கல் விழாவை மானோஜிப்பட்டி பொதிகை நகர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
8ம் ஆண்டாக நடந்த இந்த சமத்துவப் பொங்கலை 38 பெண்கள் செய்தனர். பொங்கலுக்கு தேவையான வெல்லம், அரிசி, ஏலக்காய், பருப்பு மற்றும் பொருட்கள் வைத்துக் கொள்ள ஒரு பாத்திரம் என்று 38 பெண்களுக்கும் ராமநாதபுரம் ஊராட்சித் தலைவர் குழந்தையம்மாள் ரவிச்சந்திரன் வழங்கி விழாவை தொடக்கி வைத்தார். தொடர்ந்து கோலமிட்ட அடுப்புகளில் பெண்கள் பொங்கல் பானையை வைத்து பொங்கலிட்டனர்.
விழாவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி அனைவரும் சமம் என்பதை உணர்த்தி வருகிறோம். இதுபோன்று நடக்கும் சமத்துவமான பொங்கல் விழாவில் சகோதரத்துவம் மிகுந்து காணப்படும். அதுபோன்று இங்கு நடக்கும் இந்த சமத்துவப் பொங்கல் விழாவும் உள்ளது என்றார்.
தொடர்ந்து பொங்கல் வைத்து நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை வார்டு உறுப்பினர் சத்யா ராமலிங்கம், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.