தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இசைக்கலைஞர்கள் வாழ்ந்தனர். தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு ஆண்கள், இதிகாச நாயகிகள், நாயகன்கள் போன்று மேடையில் தோன்றி நடிக்கும் இந்த பாணி நாடகத்துக்கு பாகவத மேளா நாடகம் எனப் பெயர்.
தஞ்சாவூர் அருகே மெலட்டூர், சாலியமங்கலம் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த பாகவத மேளா நாடகம் இன்றளவும் நடக்கிறது.
இப்பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இதில் பங்கேற்பதற்காக மெலட்டூரை பூர்வீகமாக கொண்டவர்கள் எங்கிருந்தாலும், இந்த விழா நாட்களில் சொந்த ஊருக்கு வந்து இவ்விழாவில் பங்கேற்பதை இன்னமும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இவர்கள் பணி நிமித்தம் பெங்களூரு, சென்னை, டில்லி, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்கின்றனர். 83 வருடமாக சன்மானம் ஏதுமின்றி இதில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் பக்தியும், கலை பாரம்பரியமும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு விழா மெலட்டூரில் உள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதியில் பூர்வாங்கப்
பூஜைகள், அபிஷேகம், ஆராதனையுடன் 18 ந் தேதி தொடங்கியது. 19 ந் தேதி பிரகலாதா சரித்திரம் எனும் நாட்டிய நாடகம் நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சியில் சிலிக்கான் ஆந்திரா பல்கலைக் கழக முதன்மையர் தீன பாபு கொண்டு பட்லா, சென்னை பரதாஞ்சலி கலை இயக்குநர் அனிதா குஹா, ஓய்வு ஐ.ஏ.எஸ் அதிகாரி கரியாலி உட்பட பலர் பங்கேற்றனர். 20 ந் தேதி இரவு சென்னை பரதாஞ்சலி கலை இயக்குநர் அனிதா குஹாவின் பிரைஸ் ஆப் செவன் ஹில்ஸ் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இந்த நாட்டியம் லெட்சுமி நரசிம்ம சுவாமிக்கு அர்ப்பணிக்கப் பட்டது. நேற்று முன் தினம் இரவு மும்பை சுஜாதா ராமநாதனின் பரத நாட்டியம், அரிச் சந்திரா நாடகத்தின் முதல் பாகமும் நடந்தது. சீரியல் மோகத்தில் மூழ்கியுள்ள கிராமங்களில், இது போன்ற ஏற்பாட்டினை செய்து வரும் சங்க நிர்வாக அறங்காவலர் கலைமாமணி குமார் உள்ளிட்டோரை பாராட்ட வேண்டும்.