தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர்.
தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வம் பெருகும். தொட்ட காரியம் கை கூடும் என்பது பக்தர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை.
அதன்படி தைப்பூச நாளான இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் , வழிபாடு நடைபெற்றது. இதன்படி தஞ்சை பில்லுக்கார தெரு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதேபோல் பூக்கார தெரு சுப்பிரமணியசாமி கோயில், பெரிய கோயிலில் உள்ள முருகர் சன்னதி உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகி தரிசனம் செய்தனர். காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனையும் நிறைவேற்றினர்.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கிறது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். ஒம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார்.
குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.
முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.