தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தை சேர்ந்தது செல்லப்பன் பேட்டை. இந்த கிராமத்தில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வேண்டிக் கொண்டு செல்லப்பன்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு காளைக்கன்று வாங்கி வளர்த்து வந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக இளைஞர்கள் பராமரிப்பில் அந்த காளை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கோவில் காளை மாட்டுக்கு தீவனம் வைத்து விட்டு சென்றனர். தீவனத்தை சாப்பிட்டு விட்டு கோவில் பகுதியில் அந்த காளை இருந்துள்ளது. வழக்கம் போல் உற்சாகமாக இருந்த அந்த காளை திடீரென்று மயங்கி விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம இளைஞர்கள் உடன் கால்நடை மருத்துவரை அழைத்து
வந்தனர். அவர் பரிசோதனை செய்துவிட்டு மாடு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் கோவில் முன்பு திரண்டனர். பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தொடர்ந்து மாட்டின் உடலை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து கிராம மக்கள் அனைவரும் வணங்கினர். பின்னர் மாட்டின் உடலை கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவில் வளாகத்தில் அடக்கம் செய்தனர். கோவில் காளை மாடு திடீரென்று இறந்தது மக்களை வெகுவாக வேதனைக்குள்ளாக்கியது.