தஞ்சை அருகே மேலவெளி ஊராட்சியில் உள்ள மகாப் நகர், பாத்திமா நகர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்றுவிடுகின்றன. மேலும் ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து ஓடுகளை கீழே தள்ளிவிடுகின்றன. இதனால் அடிக்கடி வீட்டை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்வயர்கள், வெயிலில் காயவைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றன. அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கொண்டுவரும் உணவுகளை பாய்ந்து பிடுங்கி செல்கின்றன.இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர்.
அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே மேலவெளி ஊராட்சி மற்றும் வனத்துறையினர் குரங்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.