ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ் ராம் மகன் கர்தாராம் (28). இவர் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நாணயக்காரச் செட்டித் தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி வெள்ளி நகைகளை மொத்தமாக வாங்கி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி வெள்ளிக் கொலுசு, மெட்டி உள்பட 12 கிலோ வெள்ளி நகைகள் நிரப்பப்பட்ட பையை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள நகைக் கடைகளில் 5 கிலோ விற்பனை செய்துவிட்டு, மீண்டும் இரவு தஞ்சாவூருக்கு வந்தார்.
பின்னர், வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் தன்னுடன் தங்கியுள்ள ஆசுராமுடன் சென்று கொண்டிருந்தார்.
தெற்கு அலங்கம் திருவள்ளுவர் வணிக வளாகம் அருகே சென்றபோது, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் வழிமறித்து, இருவரது முகத்திலும் மிளகாய் பொடியை தூவியும், அரிவாளைக் காட்டி மிரட்டியும் 7 கிலோ வெள்ளி நகைகள் கொண்ட பையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.என். ராஜா மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் உதவி ஆய்வாளர் தென்னரசு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், செல்போன் சிக்னல்களையும் அடிப்படையாகக் கொண்டு தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய திருச்சி செம்பட்டைச் சேர்ந்த அறிவழகன் மகன் மணிகண்டன் (27), கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு லயன்கரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சரவணன் (28), 16 வயது சிறுவன், கும்பகோணம் லயன்கரை ரங்கன் தெருவைச் சேர்ந்த அன்பு ரோஸ் மகன் தீனா (21), கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் திருநரையூரைச் சேர்ந்த செல்வம் மகன் கரண் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ஐந்தரை கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.