தஞ்சாவூர் மாநகரில் மாடுகளைத் தொடர்ந்து பன்றிகள், குதிரைகள், குரங்குகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், ஆணையர் க. சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:
எஸ்.சி. மேத்தா (திமுக): வெள்ளை பிள்ளையார் கோவில் அருகேயுள்ள மீன் சந்தையால் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.
மேயர்: மீன் சந்தை ஒரு வாரத்தில் முழுமையாக வேறொரு இடத்துக்கு மாற்றி அமைக்கப்படும்.
ஜெ.வி. கோபால் (அதிமுக): ராஜ வீதிகளில் சாக்கடை நீண்ட காலமாக திறந்து கிடக்கிறது. ஒரு வேலை கூட நடைபெறவில்லை.
மேயர்: ராஜ வீதிகளில் சாக்கடை கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது. இதை இன்னும் விரைவுபடுத்தப்படும்.
யு.என். கேசவன் (அதிமுக): பன்றிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேயர்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றும் மாடுகளைப் பிடிக்கும் பணி தொடங்கப்பட்டு, இதுவரை 48 மாடுகள், கன்றுகள் பிடிக்கப்பட்டன. இதன் மூலம், மாநகரில் மாடுகள் சுற்றித் திரிவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, அடுத்து பன்றிகள் எங்கெங்கு உள்ளன என மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தால், பிடித்து ஏலத்தில் விடப்படும். குதிரைகள், குரங்குகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்கான வாகனம் அனுப்பப்பட்டுள்ளது.
மாநகரிலுள்ள 11 மாநகராட்சி பள்ளிகளில் பழைய கட்டடங்களைச் செயற் பொறியாளர் ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படும். அந்தந்த பகுதியிலுள்ள மாமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு செய்து, இடியும் நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றார் மேயர்.
மேலும், பெரியகோயில் எதிரே ஏற்கெனவே ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதி வாகன நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. தற்போது, போதிய இட வசதி இல்லாத காரணத்தால் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான 19,000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தையும் கட்டாய நில எடுப்பு மூலம் கையகப்படுத்தவும், அதற்குரிய செலவின தொகையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.