தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (36). இவருடைய மனைவி சரண்யா (29). சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக சந்திரபோஸ் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சரண்யா நேற்று முன்தினம் 100 நாள் வேலைக்காக சென்று விட்டார். வீடு பூட்டியிருப்பதை பார்த்த மர்ம நபர்கள் சந்திரபோஸ் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரண்யா, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பாபநாசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்