Skip to content

கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறிச் சந்தையில் ஒப்பந்த முறைகேடுகளைக் கண்டித்தும், சில்லறை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக வாடகை வசூலிக்கக் கோரியும் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஏஐடியுசி சாா்ந்த நேரு அண்ணா காய்கறி மாா்க்கெட் சில்லறை வியாபாரிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஆா். லட்சுமணன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் அழகேசன், கவிதா, ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சங்க வழக்குரைஞா் மு. அ. பாரதி உள்ளிட்டோா் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், 383 தரைக்கடைகளுக்கும் தலா ஒரு கடைக்கு ரூ. 60 என ஒராண்டுக்கு ரூ. 21 ஆயிரத்து 900 வசூலிக்கப்படும். 140 ஷட்டா் கடை ஏலதாரா்கள் நேரடியாக மாநகராட்சி வரி வசூல் மையத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் இக்கடைகளுக்கு தனித்தனி மீட்டா் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தலைச்சுமை ஒன்றுக்கு ரூ. 3 மட்டுமே வசூலிக்கப்படும். இத்தொகைக்கான மாநகராட்சி ரசீது ஒப்பந்ததாரா் கையெழுத்துடன் வழங்கப்படும்.

மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி மற்றும் சிறப்பு நிபந்தனைகளின்படி செலுத்தப்படும் தொகைகள் அனைத்துக்கும் மாநகராட்சி ரசீது ஒப்பந்ததாரா் கையெழுத்துடன் வழங்கப்படும். கட்டணக் கழிப்பிடம் மற்றும் சந்தை வளாகம் சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!