Skip to content
Home » தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…

தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. சரவணகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் நடந்த விவாதங்கள் வருமாறு:

வெ. கண்ணுக்கினியாள் (அமமுக): கீழவாசல் பாலம் சேதமடைந்தது தொடர்பாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

மேயர்: கீழவாசலில் ரூ. 2.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறு பாலம் 10 டன் எடையுடன் லாரி கடந்து சென்றதால் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் ஒப்பந்ததாரர் புகார் அளித்தார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் தனது தவறை ஒப்புக் கொண்டு, அதற்கான செலவு தொகையைத் தருவதாகக் கூறினார்.

இதையடுத்து, பாலம் தரமில்லாமல் கட்டப்பட்டதால் சேதமடைந்ததாக கண்ணுக்கினியாள் கூறியபோது, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும், அது மரணப் பாலமாக உள்ளதாகவும் கூறி

அதற்கான படங்களை காட்டி திமுக உறுப்பினர்கள் பேசினர்.

இதற்கு கே. மணிகண்டன் (அதிமுக) பதிலளித்து பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டது.

தொடர்ந்து, அதிமுக, அமமுக உறுப்பினர்களுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டதால், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு நடந்தது.

அப்போது, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் எழுந்து சென்றார். இருப்பினும் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் தொடர்ந்தது. பின்னர், கூட்டரங்க முன் பகுதியில் அதிமுக உறுப்பினர்கள் மணிகண்டன், கோபால், கேசவன், காந்திமதி, கலைவாணி சிவக்குமார், சரவணன், தட்சிணாமூர்த்தி, அமமுக உறுப்பினர் கண்ணுக்கினியாள், பாஜக உறுப்பினர் ஜெய்சதீஷ் ஆகிய 9 பேர் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிமுக உறுப்பினர் மணிகண்டன் கூறுகையில், கீழவாசல் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினோம். அதற்குள் மைக்கை அணைத்தது மட்டுமல்லாமல், மோதல் போக்கை ஏற்படுத்தும் விதமாக மேயர் பேசினார். இது தவறான முன்னுதாரணமாக உள்ளது. ஆணையரும், மேயரும் வந்து வருத்தம் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இப்போராட்டம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்த நிலையில், இவர்களிடம் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். மன்றக் கூட்டம் முடிந்த பிறகு இங்கு அமர்ந்து பேசக் கூடாது. எனது அறைக்கு வந்து பேசினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, பாலம் முறைகேடு, மைக் அணைக்கப்பட்டது தொடர்பாக மனு அளிக்கிறோம் என மணிகண்டன் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர், மாநகராட்சி அலுவலக வாயிலில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, அமமுக, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *