உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், கல்லறைத் திருநாளாக அனுசரிக்கின்றனர். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு இருந்தது.
தஞ்சை தூய பேதுரு ஆலய கல்லறை தோட்டத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த
கிறிஸ்தவர்கள், இறந்த தங்கள் முன்னோர்கள் சமாதி முன்பு மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர்.
தஞ்சை திரு இருதய பேராலய கல்லறை தோட்டத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் கல்லறையில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் சென்று முன்னோர்களின் சமாதி முன்பு பிரார்த்தனை செய்தனர். நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள புனித சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது மூதாதையர்களின் சமாதி முன்பு மலர்தூவியும், மெழுகுவர்த்து ஏற்றி வைத்தும் வழிபட்டனர். சிலர் மூதாதையர்களுக்கு பிடித்த இனிப்பு, குளிர்பானம், பிஸ்கட் போன்றவற்றை சமாதி முன்பு படைத்து வழிபட்டனர்.