தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும் (38) ஏற்பட்ட கள்ளக்காதலை பாரதி கண்டித்தார். இதனால், பாரதியை திவ்யாவும், சதீஷ்குமாரும் மே 16 ஆம் தேதி கொலை செய்து, திருப்பனந்தாள் பட்டம் பகுதியிலுள்ள பாலத்தின் அருகே புதைத்தனர் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் பந்தநல்லூர் காவல் நிலையத்தினர் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து, பாரதி புதைக்கப்பட்ட பட்டம் குறுக்கு சாலையில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தை திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. நான்கு அடி ஆழத்தில் இருந்த பாரதியின் உடல் சாக்கு மூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பாரதியின் முகம் நெகிழிப் பையால் மூடப்பட்டு, 8 சாக்குகள் கொண்டு, அவரது உடலை கட்டி புதைத்திருப்பதும் தெரிய வந்தது.
மீட்கப்பட்ட பாரதி உடலை மருத்துவக் குழுவினர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.