தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகம் பகுதியில் குவிந்த கடந்த 5 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை ஒரே நாளில் அகற்றிய தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 20 பேருக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் இப்பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுத்த மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்திக்கும், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், நம் வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நாம் யோசிக்கின்றோம். ஆனால் ஆடிப்பெருக்கு விழா அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பணியாற்றி அங்கிருந்த குப்பைகளை முழுமையாக அகற்றிய மாநகர் நல அலுவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார்