தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றது. இந்தச் சாலையானது பாபநாசம் அடுத்த நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, சாலபோகம், மணக்கோடு, இனாம் கிளியூர், ரெங்கநாதபுரம் வழியாகச் செல்கின்றது. நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிலமானது சாலையின் இரு பக்கமும் உள்ளது. சாலையின் மறு பக்கம் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு உரம் உள்ளிட்டவற்றை சாலையை கடந்துத் தான் விவசாயிகள் கொண்டுச் செல்ல முடியும். தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில் சாலையை கடந்துத் தான் அறுவடையான நெல்லை கொண்டு வர முடியும். இந் நிலையில் விவசாயிகள் சாலையை கடந்துச் செல்ல சாலைப் போடும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள தனியார் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைக் கண்டித்து காலை ஒரு மணி நேரம் சாலையில் கம்பெனி வாகனங்களை மறித்து 100 க்கும் மேற்ப் பட்ட விவசாயிகள் சாலை மறியல் நடத்தினர். கம்பெனியைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி என்.எச் திட்ட இயக்குநரிடம் மனு கொடுக்கக் கூறினர். இதையடுத்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தேசிய நெடுஞ்சாலையானது வயல் வழியேத் தான் செல்கின்றது. சாலையின் இரு புறமும் நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இது வரை நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை பயன்படுத்தக் கூடாதென்றால் என்ன செய்வது? எங்கள் வயலுக்கு உரம் உள்ளிட்டவற்றை எப்படி கொண்டுச் செல்வது ? மாற்றுப் பாதைக்கு வழிச் செய்ய வேண்டும் என்றனர்.