தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடியில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் காளான் வளர்ப்பு பயிற்சியாளர் ஜெகதீஸ்வரி விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி அளித்தார். ஈச்சங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவதி, துணைத்தலைவர் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துக் கொண்ட பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா பேசும் போது, விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் விவசாய வேலைகள் இல்லாத காலங்களில் காளான் உற்பத்தி செய்து அதிக லாபம் ஈட்டலாம்.
இதன் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பில் கிடைக்கும் நாட்டுக்கோழி முட்டைகளுக்கு ஈடான புரதச்சத்து கொண்ட சிறந்த காளான் உணவு வகைகள் குறைந்த செலவில் விவசாயிகள் உற்பத்தி செய்து கொள்ள முடியும். சுவையான உணவு வகைகளை இதன் மூலம் குறைந்த செலவில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் செய்வதன் மூலம் புரதச்சத்து தேவை ஈடு செய்யப்படுகிறது. மேலும் அறுவடைக்கு பின் கிடைக்கும் வைக்கோலை மூலப் பொருளாகக் கொண்டு காளான் வளர்ப்பு செய்யப்படுவதால் வைக்கோலை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். எனவே கிராமப்புற படித்த இளைஞர்களும், பண்ணை மகளிரும் தங்களுக்கு வேலை நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் இந்த காளான் வளர்ப்பை மேற்கொண்டு குடும்பத்திற்கான வருவாயை அதிகப்படுத்த முடியும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர் சிவரஞ்சனி, உதவி அலுவலர் சரவணன், உதவி மேலாளர்கள் பிரியா, ரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.