தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மேல மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சிவராமன் (42 ) இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (37) கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் புதன்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் மின்சார வயரிங் வேலை செய்துள்ளார். பணி முடிந்த பின்னர் பீஸ் போடச் சென்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்து போன சிவராமன் மனைவி கீதா அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.