தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த வாலிபருக்கும், நிறுவனத்தை நடத்தி வரும் திருச்சி எல்.ஐ.சி. காலனி, கே.கே.நகரை சேர்ந்த வேதகிரி என்ற வினோத் (39) என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வாலிபர் வேலையை விட்டு விட்டு தஞ்சைக்கு வந்து விட்டார். தற்போது சென்னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத், தனது சகோதரி பிரீத்தி (41), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் (44), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை
சமாதானபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (32), திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ராஜா (32) ஆகியோருடன் ஒரு காரில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அந்த டிரைவர் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டில் அவர் இல்லை. இதனால் வீட்டில் இருந்த டிரைவரின் மனைவியை வலுக்கட்டாயமாக 5 பேரும் சேர்ந்து காரில் கடத்தி சென்றனர்.
அப்போது வெளியில் சென்று வந்த அந்த வாலிபர் உடன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். உடன் எஸ்.பி. ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில், வல்லம் டிஎஸ்பி நித்யா மேற்பார்வையில், தமிழ் பல்கலைக்கழக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ, கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் காரை விரட்டி சென்றனர். தஞ்சை மாவட்டம் புதுக்குடி எல்லையில் வைத்து காரை போலீசார் மடக்கி பிடித்து அந்த பெண்ணை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், பிரீத்தி, மாரியப்பன், கோபாலகிருஷ்ணன், ராஜா ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வினோத்துக்கும், தஞ்சை டிரைவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால்தான் டிரைவரின் மனைவியை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.சினிமாவில் வரும் காட்சிகள் போல் பெண் கடத்தப்பட்டு 1 மணி நேரத்திலேயே கடத்தல் கும்பலை போலீசார் விரட்டி பிடித்து பத்திரமாக மீட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.