Skip to content
Home » தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மைய வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொது மக்கள் தங்கள் செல்லப்பிரணிகளை கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவு செய்திடும் வகையில் புதிய இணையதள முகவரியினை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்புச் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை உதவியுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக நாய்கள் கண்காட்சி இன்று

சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை தஞ்சாவூர் மாதாகோட்டை சாலையில் அமைந்துள்ள மிருகவதை தடுப்புச் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் மிருகவதை தடுப்புச் சங்கம் 1935ம் ஆண்டு பொன்னுசாமி நாடார் வாங்கிக் தானமாக கொடுத்த 13 ஏக்கர் நிலத்தில் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், சாலைகள் மற்றும் பொது இடங்களில் காயமுற்ற செல்லப்பிராணிகளை காப்பாற்றி பராமரித்தல், தடுப்பூசி முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்க்கொண்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக பாரம்பரிய நாய் இனங்கள் பாதுகாக்கவும். செல்லப்பிராணிகளுக்கு மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தவும், ஆதரவற்று சுற்றி திரியும் நாய்களை தத்தெடுகவும், பிராணிகள் வதை கொடுமையில் சிக்காமல் இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாபெரும் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இக்கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோம்பை, சிப்பிப்பாறை, கண்ணி, அலங்கு, கட்டைக்கால், மண்டை நாய் உள்ளிட்ட நாட்டு வகை இனங்களும், டாபர்மேன், லப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட், ரோட் வீய்லர். பொமேரனியன், டால் மெட்டியன், பூடில், சைபீரியன் ஹஸ்கி, காக்கர் ஸ்பேனியல் உள்ளிட்ட பிற வகை இனங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கு பெறுகின்றன. மேலும் நாய்களின் அணிவகுப்பு மற்றும் அதன் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறும்

இக்கண்காட்சியில் பங்கேற்பதற்கு நாய் ஒன்றுக்கு ரூ. 250 பதிவு கட்டணமாக நிரணயிக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியில் பங்குபெறும் நாய்களுக்கு மிருகவதை தடுப்புச் சங்கத்தின் சார்பில் கட்டணம் இல்லாமல் ராபீஸ் தடுப்பூசி, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். சிறப்பு பரிசுகளும் உண்டு. கண்காட்சியில் பங்கேற்க செல்லப் பிராணிகள் வளர்ப்போர் 74183 64555 அல்லது www.spcathanjavur.org https://forms.gle/9bNnpiXCMTcqyko29 என்று இணையதள முகவரியில் பதிவு செய்து பங்கேற்கலாம்.இக்கண்காட்சிக்கு உறுதுணையாக யாகப்பா பன்னாட்டு பள்ளி, மகாராஜா சில்க்ஸ், ஏஞ்சல் ப்ரொடக்ஷன், பாம்பே ஸ்வீட்ஸ், டியூராஃபிட் மற்றும் பிற நிறுவனங்கள் உதவி புரிந்து வருகின்றன.

தஞ்சை முதல் முறையாக நடைபெறும் இந்த மாபெரும் செல்லப் பிராணிகள் கண்காட்சியினை அனைவரும் கட்டணம் இல்லாமல் பார்த்து மகிழலாம். குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், மிருகவதை தடுப்புச் சங்க அலுவல் சாரா உறுப்பீனர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ். விஜயலட்சுமி பாரதி, முனைவர் சதீஷ்குமார், ஆடிட்டர். ராகவி, ரவிச்சந்திரன் ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் ரத்தினகுமார் டிக்சன், ராபின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!