தஞ்சாவூரில் வரும் 7ம் தேதி நடக்க உள்ள கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா எம்பி அலுவலகத் திறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துணை முதல்வர் உதயநிதி வருகிறார்.
இதற்காக தஞ்சாவூர் சாந்த பிள்ளை கேட் பகுதியில் திமுக கட்சி கொடி ஊன்றும் பணிகள் நடந்து வந்தது. இதில் கீழவாசல் பகுதியை சேர்ந்த நாகராஜன் (38) என்ற கூலி தொழிலாளி நேற்று மாலை ஈடுபட்டு இருந்தார். டிரான்ஸ்பார்மர் அருகில் இரும்பு குழாயில் தி.மு.க., கட்சி கொடியை கட்டி, ஊன்ற முயன்றுள்ளார்.
அப்போது, கொடி கம்பம் மின்சார கம்பியில் உரசியதில் நாகராஜன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருடன் வேலை செய்துக்கொண்டு இருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நாகராஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்த கொடி கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.