தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லாஜிஸ்டிக் (LOGISTIC) பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்ட இம்முகாமில் லாஜீஸ்கிம், இண்டஸ்ட்ரியல் புரடக்ஷ்ன் எய்டர், ஜீமெக், சீல்ஹெச்ஆர், திங்க்சிங்க், 108 ஆம்புலன்ஸ் முதலான ஆறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பயிற்சி பெற்ற மாணவர்களை தெரிவு செய்தனர். வேலைவாய்ப்பு முகாமில் திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீனாட்சிசுந்தரம், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரூபி, வேலை வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரமேஷ் சாமியப்பா ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டு உரை நிகழ்த்தினர்.
முன்னதாக தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வர் தனராஜன் பேசியதாவது….
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை போல மென்திறன் பயிற்சிகளை பெற்று பட்ட வகுப்பை நிறைவு செய்யும் போதே வேலைவாய்ப்பை பெறுகிற நிலையை உருவாக்க வேண்டும் எனும் கொள்கை நோக்கில் நான் முதல்வன் என்ற உயர்ந்த திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியான லாஜிஸ்டிக் பயிற்சி சான்றிதழ் வகுப்பு இக்கல்லூரியில் நடைபெற்றது என்றும், அதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் திறன்மேம்பாடு அடைந்து இன்று (நேற்று) நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆறு நிறுவனங்களில் வேலையில் சேரும் நியமன ஆணையை பெறுகின்றனர். இதுதான் இந்த கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் பயன், தமிழ்நாடு முதல்வரின் கனவுத்திட்டத்தின் பயன் என்றும் பேசினார்.
தொடர்ந்து நேற்று காலையில் இருந்து மாலை வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்களில் 160 மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை பிற்பகலில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வரும், தனியார் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்களும் வழங்கினார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு வேலைவாய்ப்பு மையமும், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி நூலகரும் மற்றும் நிதியாளரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.