தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது ஆண்டாக ஒரு நாள் மட்டும் செயல் படும் ஆளில்லா கடையை பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் திறந்தன. ஒரு நாள் மட்டும் செயல் படும் இந்த கடையில் ரூ 15,000 மதிப்பில் பிஸ்கட், கடலை மிட்டாய், பிளாஸ்டிக் ஸ்டூல், குப்பை கூடை, பேஸ்ட், சோப், பிளாஸ்டிக் மக்கு உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையானப் பொருட்கள் வைக்கப் பட்டிருந்தன. அதன் மீது விலை ஒட்டப் பட்டிருந்தது. தங்களுக்குத் தேவையான பொருளை எடுக்கும் மக்கள், அதற்கு உரிய பணத்தை, அங்கு வைக்கப் பட்டிருந்த பெட்டியில் போட வேண்டும். ஆளில்லா கடையை ரோட்டரி டிஸ்டிரிக்ட் செகரட்டரியேட் அட்வைசர் ரமேஷ் பாபு திறந்து வைத்து பேசினார். பாபநாசம் டி.எஸ்.பி பூரணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ரோட்டரி உதவி ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் பாபநாசம் ரோட்டரிச் சங்க பொருளாளர் ரவிச் சந்திரன், முன்னாள் தலைவர்கள் செந்தில் நாதன், அன்பு சீனிவாசன், சரவணன், சேவியர், கோவிந்தராஜ், ராஜேந்திரன், ஜெயசேகர், முருகானந்தம், அறிவழகன், பக்ருதீன், சுப்ரமண்யன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். செயலாளர் முருகவேலு நன்றி கூறினார். இலாப நோக்கமின்றி செயல்படுத்தப் படும் இந்தத் திட்டத்தில் வரும் தொகை ரோட்டரி சேவைக்கு பயன்படுத்தப் படும் என பாபநாசம் ரோட்டரி தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
