தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சின்னபேச்சி (63). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடை மீது அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் அடிக்கடி கல் வீசி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சின்னபேச்சிக்கும், மகேந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சின்னபேச்சியை மகேந்திரன் கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். அப்போது சின்னபேச்சி தப்பித்து சென்று அப்பகுதியிலுள்ள துரை (67) என்பவர் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். இருப்பினும் பின்தொடர்ந்து வந்த மகேந்திரன் சின்னபேச்சியை கத்தியால் குத்தினார். மேலும், இதைத் தடுக்க வந்த துரையையும் மகேந்திரன் கத்தி குத்தினார். இதில் துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னபேச்சி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு தஞ்சாவூர் இரண்டாவது மற்றும் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி மலர்விழி விசாரித்து மகேந்திரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.