Skip to content

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தூய்மை பணியாளர்கள் தங்களது கடமையில் தவறாது பணி செய்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

கிராமம், நகரம் என அனைத்தின் சுகாதாரத்திலும் தூய்மை பணியாளர்களின் பங்கு அளப்பரியது . மக்களின் சுகாதார நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பண்டிகை நாளன்று கூட பணிகளில் துரித கவனம் செலுத்திவரும் நிகழ்வு நெகழ்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பிரபல துணிக்கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு பிடித்த புத்தாடையை தேர்வு செய்ய வைத்து அதை வாங்கிக்கொடுக்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சி 12-வது டிவிஷனை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், அனிமேட்டர் உள்ளிட்ட 40 பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு பணியாளரின் குடும்பத்தார் என சுமார் 150 பேரை ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் தனி வாகனத்தில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களே தேர்வு செய்ய வைத்து வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர்.

ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பில் புத்தாடைகள் என மொத்தம் 1.50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டது .
முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தானம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞான சுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!